கூட்டணி விவகாரம்: செப்.16-ல் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை
தமிழக பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்வது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில், வரும் 16-ம் தேதி கமலாலயத்தில் ஒரு முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக தயாராகி வருகிறது. தற்பொழுது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் தினகரன் வெளியேறிய நிலையில், அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் முன்வந்த போர்க்கொடி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிரு நாட்களுக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நயினர் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அழைத்து தேசிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி விவகாரங்களை பற்றிய ஆலோசனை கமலாலயத்தில் நடைபெற உள்ளது.
இதன்படி, “சிந்தன் பைதக்” எனப்படும் சிந்தனை ஆய்வுக்கூட்டம் செப்.16-ம் தேதி கமலாலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையிடுகிறார். கூட்டத்தில் நயினர் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், வானதி, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் நிலை தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாஜக நிர்வாகிகள் தெரிவித்ததாவது, இக்கூட்டத்தில் கட்சி மற்றும் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.