அதிமுக உள்கட்சி சிக்கல்கள் கூட்டணிக்கு பாதிப்பு அளிக்காது: ஹெச்.ராஜா

அதிமுக உள்கட்சி பிரச்சினைகள், தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாட்டை பாதிக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உறுதியளித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் என்பது வெறும் வரி மாற்றமல்ல, பொருளாதார அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் என்றும், இதன் மூலம் 2027-க்குள் இந்தியா உலக பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும் கூறினார்.

அமித்ஷாவை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நல்ல விஷயங்களைப் பற்றி பேசியிருப்பார்; பேச்சுவார்த்தை அமைதியாக நடந்தது, பிரச்சினைகள் விரைவில் தீரும். எனவே, அதிமுக உள்கட்சிச் சிக்கல்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது என்று அவர் விளக்கினார்.

மேலும், மக்கள் மாற்றம் தேவை என முடிவு செய்துவிட்டால், யார் யாருடன் கூட்டணியில் உள்ளனர் என்பதை அவர்கள் கவனிக்க மாட்டார்கள். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வீடு திருப்ப மக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதற்கு அதிமுக–பாஜக கூட்டணியே சரியான மாற்று என மக்கள் கருதுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அதே சமயம், நடிகர் விஜய் குறித்து பேசும் போது, “திடீரென அரசியலுக்கு வந்த அவர் எதையோ பேசுகிறார்; ஆனால் அவர் கூறுவது பொருளற்றதாக உள்ளது. பாஜகவைக் கொள்கை எதிரி என்று சொல்கிறார், ஆனால் தவெகவின் கொள்கை என்ன என்பது குறித்து அவர் விளக்கவில்லை. எனவே, தவெக மாற்று சக்தியாக வர முடியாது” என்றார்.

Facebook Comments Box