“போலி செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி” – ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

புகார்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்காமல், போலியான சில செய்திகளை மக்களிடம் சேர்க்க முயற்சி செய்து வருகிறார் என ராகுல் காந்தியை வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

கோவை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுங்கம் பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்க ரூ.19.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்கும் நேர விவரங்களை காட்டும் எலக்ட்ரானிக் பதாகை மற்றும் வைஃபை சேவை வசதிகளுடன் இது அமைக்கப்படும்” என்றார்.

மேலும், “மத்திய அரசு மேற்கொண்ட சமீபத்திய ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை வளர்ந்து வரும் பாரதத்தை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகும். அத்தியாவசிய பொருட்களின் வரியை குறைத்திருப்பது வியாபாரத்தை அதிகரிக்கும்; மக்களுக்கு சேமிப்பை ஏற்படுத்தும். இப்படியான நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் நன்றி. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு தொழில், வர்த்தக அமைப்புகள் இதற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “வாக்குத் திருட்டு குறித்த எந்த புகாரையும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்காமல், போலியான செய்திகளை மக்களிடம் பரப்ப ராகுல் காந்தி தொடர்ந்து முயற்சிக்கிறார். தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த பிறகும் இதேபோன்று பேசி வருவது, அவரின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. பாஜக வெற்றி பெறும் நேரங்களில் பிரச்சினைகளை கிளப்புவது, அவரின் வழக்கமாகவே இருந்து வருகிறது” என அவர் சாடினார்.

அதேசமயம், “தமிழகத்தில் பாஜக தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. கிரைண்டர் மீதான வரி குறைப்பை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு திராவிட மாடல், சமூக நீதி மாடல் எனக் கூறிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டம், ஒழுங்கு சீர்கெட்ட நிலை உள்ளது.

அரசியல் கட்சி நிகழ்வுகளில் பொது சொத்துகள் சேதமடைந்தால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் தலைவர்களும், கட்சிகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Facebook Comments Box