“தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை, ஆனாலும் பிரதமர் மோடி…” – நிர்மலா சீதாராமன் உரை
“தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அதனால் என்ன… அது கூட பாரத தேசத்தின் ஒரு அங்கமே என்று கருதி பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நூற்றாண்டு விழா குழுத் தலைவர் எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் எஸ்.எஸ்.டி. கிருஷ்ணமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம். ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம். பரமசிவம் தீப்பெட்டி தொழிலின் வரலாறு குறித்து உரையாற்றினார். எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் செ.ராஜு, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஐடிசி நிதித்துறை தலைவர் சுரேந்தர் கே.ஷிபானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தீப்பெட்டி தொழிலுக்கான கண்காட்சிகளை பார்வையிட்டு, சிவகாசிக்கு இந்தத் தொழிலை கொண்டு வந்த சண்முக நாடார், அய்யநாடார் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு மலரை வெளியிட்டு, பெண் தொழிலாளர்களை கௌரவித்தார்.
அவர் உரையில் கூறியதாவது:
“இந்த நிலம் குறித்து ஏராளமானோர் பேசியுள்ளனர். மதுரையில் பிறந்த எனக்கு, சிறுவயது முதலே உறவினர்களின் வாயிலாக தென் மாவட்டங்களைப் பற்றிய பல விஷயங்கள் தெரிந்தன.
தென் மாவட்டங்கள் நம் தேசத்தின் நரம்பு. இங்குள்ள ஒவ்வொரு மாவட்ட மக்களும் தேசத்திற்கு பெருமை சேர்த்தவர்கள். வீரமும், கவிதையும், தேசப்பற்றும் நிறைந்தவர்கள். வறண்ட நிலம் இருந்தாலும் தங்கள் உழைப்பால் வாழ்வளிப்பவர்கள் இங்குள்ள பெண்கள்.
தீப்பெட்டித் தொழில் பெண்களை மையமாகக் கொண்டது. அவர்களுக்கு எனது வணக்கங்கள். வறண்ட நிலத்தில் குடும்பத்தையும் தொழிலையும் காத்து, இந்தப் பெரிய தொழிலை உருவாக்கிய பெருமை ஒவ்வொரு பெண்மணிக்கும் உண்டு. கட்டுப்பாடு, கைத்திறன் – இவற்றால் இத்தொழில் நீடிக்கிறது. பெண்கள்தான் சக்கரம்; சக்கரம் இல்லாமல் வண்டி நகராது.
சிறு வயதிலிருந்தே தீப்பெட்டி, பட்டாசு தொழிலை நான் நன்கு அறிவேன். ஊரில் இருந்து யார் வந்தாலும் கரிசனமாக சந்திப்பேன். கோரிக்கை வந்தவுடன் பிரதமரிடம் பேசுவேன்; அவர் ஆதரவு அளிக்கிறார்.
தூத்துக்குடியில் மத்திய அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எம்.பி. கூட இல்லை. இருந்தாலும் பிரதமர் அதை பாரதத்தின் ஒரு அங்கம் என கருதி, அங்கே திட்டங்களை கொண்டு செல்கிறார். தமிழகத்திற்கு பிரதமருக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இந்த விழாவே பிரதமருக்கான பாராட்டாகும். அவருடைய ஆதரவின்றி எதுவும் சாத்தியமில்லை. தென் மாவட்ட திட்டங்களுக்குக் காரணம் பிரதமரே. ஆங்கிலத்தில் சொல்வது போல ‘spoke in the wheel’, நான் ஒரு spoke; ஆனால் அந்தச் சக்கரம் பிரதமர்தான்.
2047க்குள் இந்தியாவை முன்னேற்றமடைந்த நாடாக மாற்றப் பாடுபடுகிறார் பிரதமர். அந்நாளுக்குள் தீப்பெட்டி, பட்டாசு தொழில் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றிய திட்டம் நீங்கள் வகுத்து அளிக்க வேண்டும். அதற்கான உதவியை மத்திய அரசு தரும்.
இப்பகுதி முன்னேற்றத்திற்காக தொலைநோக்கு அறிக்கையை அளித்தால், அதனை அரசு செயல்படுத்தும். தீப்பெட்டித் தொழில் இன்னும் 200 ஆண்டுகள் தொடர எது செய்ய வேண்டும் என பரிந்துரை அளிக்கலாம்.
கடம்பூர் ராஜு எப்போதும் தனது தொகுதி நலனுக்காக வலியுறுத்துகிறார். 2026-ல் எம்.எல்.ஏ, 2029-ல் எம்.பி. தேர்வு செய்யும்போது அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் குழுவினர் தென் மாவட்ட முன்னேற்றத்திற்கான திட்டம் அளித்தால், 2047க்குள் சிறந்த நிலையை அடைய நாமெல்லாம் முயற்சி எடுப்போம்.
ஜிஎஸ்டி குறித்து – இது ஒரு சீர்திருத்தம் அல்ல, புரட்சி. 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. 28% இருந்து 18%, 12% இருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கான சேமிப்பு கிடைக்கும். அந்தச் சேமிப்பை உங்கள் குடும்ப நலனுக்குப் பயன்படுத்துங்கள்.
இந்த ஜிஎஸ்டி புரட்சியை பிரதமர் மோடி தீபாவளி பரிசாக மக்களுக்கு அளித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்.”