தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு: முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து தமிழக பாஜக விமர்சனம்

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள ரூ.30,000 கோடி முதலீடு விவகாரத்தைப் பற்றிய முதல்வர் ஸ்டாலின் பேச்சை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில்,

“தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டின் அடிப்படையில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் உருவாக உள்ளன. இதன் மூலம் 55 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும், இது ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் ஒரு எடுத்துக்காட்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் மத்திய அரசின் கப்பல், துறைமுகம் மற்றும் நீர்நிலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற கொச்சின் ஷிப் யார்ட் லிமிடெட் மற்றும் மஸாகன் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களே இந்த முதலீட்டைச் செய்கின்றன. சுயசார்பு பாரதம், சாகர் மாலா போன்ற திட்டங்கள் மூலம் இந்த நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றது பாஜக அரசு தான்.

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவது நமக்கு பெருமைதான். ஆனால் அதை உருவாக்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி சொல்லாமல், அதை ‘திராவிட மாடல்’ சாதனையாகச் சித்தரிப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோன்ற அரசியல் செயல். இது திராவிட மாடல் அல்ல, உண்மையான தேசிய மாடல்” என அவர் கூறியுள்ளார்.

Facebook Comments Box