தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் – ஜெ.பி. நட்டா நடவடிக்கை
பாஜக தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதேபோல், பிஹார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களையும் அக்கட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு, தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா நியமித்துள்ளார். இதன் படி, பாஜக தேசிய துணைத் தலைவர் மற்றும் மக்களவையில் உறுப்பினராக உள்ள பைஜயந்த் பாண்டா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கூட்டுறவு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறைகளின் இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.” என குறிப்பிட்டார்.
மேலும், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைப் பொறுப்பாளர்களாக மத்திய நீர் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பூபேந்திர் யாதவ் மற்றும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேப் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜகத் தயாரிப்புகள் தீவிரமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.