ஜெபம் செய்ய சென்றவர்களுக்கு குங்குமம் பூசியதாக புகார்: நயினார் நாகேந்திரன் உதவியாளர் உட்பட பாஜகவினர் 3 பேர் மீது வழக்கு
நெல்லை அருகே ஜெபம் செய்ய சென்றவர்களுக்கு குங்குமம் பூசியதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 22-ம் தேதி கீழக்கல்லூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களில் சென்றனர்.
அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவினர் அங்குராஜ் மற்றும் சங்கர் ஆகியோர் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிலரை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்து சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளத்தைச் சேர்ந்த டேவிட் நிர்மல்துரை சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கூறியதாவது, “பட்டக்கல்லூரை சேர்ந்த சிவபாக்கியம் என்பவரது அழைப்பில் கீழக்கல்லூரில் உடல்நலக்குறைவான உறவினருக்காக ஜெபம் செய்ய சென்றபோது, 3 பேர் கொலை மிரட்டல் விடுத்து, நெற்றியில் குங்குமம் பூசி மத உணர்வுகளை காயப்படுத்தினர்”.
போலீசார் விசாரித்து, வழக்கறிஞர் மணிகண்டன் மகாதேவன், அங்குராஜ் மற்றும் சங்கர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இதில் அங்குராஜ், நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் ஆவார்.
இதற்கிடையில், வழக்கறிஞர் மணிகண்டன் மகாதேவன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அவர் கூறியதாவது, டேவிட் நிர்மல்துரை, “அவரை அவதூறாக பேசினார்கள், கொலை மிரட்டல் விடுத்தனர் மற்றும் பிள்ளையார் கோயிலில் விபூதியை பூசிக்கொண்டு இந்து மதத்தை அவதூறாகப் பேசினர்”.