முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: பாஜக புகார்
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 9,133 வாக்காளர்கள் தவறான முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை நடத்தி, அது தவறான தகவல் என விளக்கமளித்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியதாகவும், விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என பாஜக செய்தியாளர் ஏ.என்.எஸ். பிரசாத் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு சமர்பித்துள்ளார்.
அந்த மனுவில், 2023 மற்றும் 2024 ஆண்டு வாக்காளர் தரவுப் பகுப்பாய்வில், கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் 4,370 இரட்டை பதிவுகள், 9,133 போலி முகவரியுடன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
குறிப்பாக, வீட்டு எண் 11, வாக்குச்சாவடி எண் 84-ல் 30 வாக்காளர் அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5,964 வாக்காளர்கள் தொடர்பில்லாத வீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, கொளத்தூர் தொகுதியில் உடனடியாக தணிக்கை நடத்தி போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். அதோடு, வாக்காளர் அடையாள அட்டை புதுப்பிப்பு பணிகளை தீவிரமாக தொடங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.