தேஜகூ எம்.பிக்கள் குழுவுடன் விஜய் இணைந்து செயல்பட வேண்டும்: தமிழ்நாடு பாஜக
கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நேரடி ஆய்வு செய்து உண்மைகளை வெளிக்கொணர தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜகூ) எம்.பிக்கள் குழுவுடன், தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கரூர் துயரச் சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாக ஆய்வு செய்ய, எம்.பி. ஹேம மாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட தேஜகூ எம்.பிக்கள் குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவை நடிகர் விஜய் நேரில் சந்தித்து உரையாடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தனது பங்களிப்பை வழங்க வேண்டும்.
இந்த கூட்ட நெரிசல் மரணச்சம்பவம் தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. அதேபோன்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் அறிக்கை கேட்டுள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, உண்மை கண்டறியும் தேஜகூ எம்.பிக்கள் குழு, இன்று கரூரில் சம்பவம் தொடர்பான ஆய்வை மேற்கொள்கிறது. 41 உயிரிழப்புகளின் பின்னணி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்து முழுமையான தகவல்களை மக்களிடம் வெளிப்படுத்துவதே இக்குழுவின் நோக்கம்.
இக்குழு சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதா, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் தவறுகள் காரணமா, அல்லது தமிழ்நாடு வெற்றிக் கழக ஏற்பாடுகளில் குறைபாடுகளா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கும் பதில் தேட உள்ளது. சம்பவ இடத்தையும் கரூர் மருத்துவமனைகளையும் பார்வையிட்டு, காயமடைந்தவர்களையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
பின்னர், இக்குழுவின் முழுமையான அறிக்கை பாஜக தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் தவெக குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
எனவே, சம்பவத்தின்போது நேரில் இருந்த சாட்சியாக விஜய், உண்மை நிலவரங்களை விளக்க வேண்டும். காவல்துறையிடம் கேட்டு அறிந்தாலும், மக்களிடம் விசாரணை நடத்தினாலும், தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் வழங்கும் தகவல்கள்தான் உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டும். எனவே, அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து எம்.பிக்கள் குழுவைச் சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கரூர் விபத்தின் பின்னணி உண்மைகளை வெளிக்கொணர விஜய் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு பிரசாத் தெரிவித்துள்ளார்.