“கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான்” – ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதில்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது X பக்கத்தில், ‘ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டுக்கு அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் நிலை இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். என்பது நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய இயக்கம். அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்ற தலைவர்களை உருவாக்கியது இந்த இயக்கமே.

ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் காலத்தில் கூட மகாத்மா காந்தி பயிற்சி முகாமிற்கு நேரில் வந்து, ‘என் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்’ என்று பாராட்டியவர்.

அதேபோல், கருணாநிதி மறைவுக்குப் பிறகு நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலையை திறந்தது அன்றைய துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு. கருணாநிதி நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இவர்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே.

1999 முதல் 2003 வரை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திமுகவும் பங்கேற்றது. அப்போது பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் அத்வானி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள்.

இன்றைய நிலைமையில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ளோர் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் மூலம் உருவாக்கப்பட்டவர்கள். ஆளுநர்கள், பல மாநில முதலமைச்சர்கள் கூட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உண்மையை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும்” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box