“சிவாஜியை விட திறமையாக நடிக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்” — ஹெச்.ராஜா விமர்சனம்

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நடிகர் சிவாஜியை விட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறமையாக நடிக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் அக்.13-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. நகரத் தலைவர் உதயா வரவேற்றார். இக்கூட்டத்தில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா தெரிவித்ததாவது:

“மதுரையில் அக்.12-ம் தேதி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அக்.13-ம் தேதி காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்கிறார். கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடு காரணம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக சார்பாக செயல்படுகிறார்; அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

கள்ளக்குறிச்சியில் 60 பேர் உயிரிழந்தபோது சென்று பார்க்காத முதல்வர், கரூரில் நடந்த சம்பவத்துக்கு மட்டும் உடனடியாக சென்றது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடிகர் சிவாஜியை விட திறமையாக நடிக்கிறார். முதல்வர் தாம் என்ன பேசுகிறோம் என்பதையும் உணராமல் பேசுகிறார். காங்கிரஸ், திமுக சேர்ந்து கச்சத்தீவை கொடுத்துவிட்டு, அதை மீட்க வேண்டும் என்று இப்போது கூறுகின்றனர்.

திமுக அரசில் நேர்மை இல்லை. காங்கிரஸ், திமுக சேர்ந்து நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு, அதை திமுகவே நீக்க வேண்டும் என்று பேசுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 6,700 கொலைகள் நடைபெற்றுள்ளன. திமுக அமைச்சர்கள் 15 பேர் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

திமுகவை எதிர்த்து கட்சி தொடங்கிய கமல்ஹாசன் இப்போது எம்.பி பதவிக்காக விலை போய்விட்டார். திமுக அரசு எதிர்க்கருத்தே வரக்கூடாது என்ற எண்ணத்தில் செயல் படுகிறது; அரசை விமர்சிக்கும் நபர்களை கைது செய்கிறது. திமுக அணையப்போகும் விளக்கு. திருமாவளவன் ஆதிதிராவிடர் மக்களுக்காக உண்மையில் கவலைப்படுபவர் அல்லர்,” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Facebook Comments Box