“விஜய் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை; கரூர் பாதுகாப்பானது” – அண்ணாமலை கருத்து
‘அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும்’ என்பது நிலைமை இல்லை. கரூர் பாதுகாப்பான நகரம். விஜய் தைரியமாக வரலாம்’ என அண்ணாமலை தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் எல்லோருக்கும் எந்த இடத்திற்கும் செல்ல உரிமை உண்டு. எனக்கு பொருந்துவது, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் சில இடங்களைப் போல, அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இங்கு இல்லை.
எனவே, விஜய் தைரியமாக கரூர் செல்லலாம். அவரது பாதுகாப்பை அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் கரூரைச் சார்ந்தவன். எங்க ஊருக்கு வர அனுமதி எதற்கு? கரூருக்கு வருவது கடினம் என்றால், எங்க ஊரில் மக்கள் பாதுகாப்பற்றவா? அதனால், விஜய் எங்கள் ஊருக்கு வர விரும்பினால் வரலாம். யாரை பார்க்க வேண்டுமோ வந்து பார்த்து செல்லட்டும்.
கரூருக்கு செல்வதை அச்சுறுத்தல் எனக் காட்ட வேண்டாம். இது நமது தமிழகத்தை தாழ்த்தும் விதமாக ஆகிவிடும். ‘கரூருக்கு விஜய் சென்றால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதை நான் கவனிக்கவில்லை. கரூர் பாதுகாப்பான இடம்.
திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவது மக்களை அடிப்பதற்காகவா? திருமாவளவன் ஒரு மூத்த தலைவர். சமீபத்தில் அவரது தொண்டர்கள் நடந்து கொண்ட நடத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதிர்ச்சி என்னவென்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்கியதற்காக சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற இடத்தில், இவர்களே இன்னொருவரை தாக்கினால் எப்படி? ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஏன் பள்ளிக்குள் நடத்துகிறார்கள்? அரசியல் லாபத்துக்காக பள்ளிக்கூடத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு சாதிகளைத் தாண்டி பொது தலைவர். அவரது பெயரை பாலத்திற்கு சூட்டியது சரி. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பெயர்களுக்கு மாற்று பெயர்கள் வைக்க உத்தரவிட்ட அரசாணையில் கருணாநிதி பெயர் உள்ளது. ஆனால், எம்ஜிஆர் பெயர் இல்லை,” என்று அவர் கூறினார்.