ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி வடிவம் பெறும் – நயினார் நாகேந்திரன்
“எங்கள் கூட்டணி உறுதியாகவும் வலிமையாகவும் உள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் கூட்டணியின் இறுதி வடிவம் உருவாகும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிர் தமிழனின் பயணம்” என்ற கோஷத்துடன் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி பிரச்சாரப் பயணத்தை நாளை (அக்.12) மதுரையில் தொடங்க உள்ளார். இதற்காக அவர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்:
“தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஆண்டாள் சன்னிதியில் இன்று வழிபாடு செய்தேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாஜக சார்பில் நான் நாளை மதுரையில் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறேன். தமிழகம் முழுவதும் இதனை விரிவுபடுத்துவோம். ஆண்டாள் சன்னிதியில் தரிசனம் செய்ததுடன் இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயமாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.”
அதிமுக மீதான டிடிவி தினகரனின் விமர்சனங்களைப் பற்றி அவர் கூறியதாவது:
“டிடிவி தினகரனுக்கு அதிமுக மீது ஏன் இத்தனை வெறுப்பு என்று புரியவில்லை. முன்பும் என் மீது விமர்சனங்கள் வந்தன; இப்போது அமைதி நிலவுகிறது. தங்கள் சொந்த பிரச்சினைக்காக கட்சிகளை விமர்சிப்பது சரியல்ல. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் இணைந்தாலும் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்,” என்றார்.
அவர் மேலும் கூறினார்:
“ஜனவரியில் கூட்டணி முழுமையான வடிவத்தை அடையும். எங்கள் கூட்டணி வலுவானது. ‘நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்’ என்று திமுக வதந்தி பரப்பி வருகிறது. ஆனால் அதனை தவறாக நிரூபித்து, ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியே பிடிக்கும்,” என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் கோபால்சாமி, வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.