‘தக் லைஃப்’ திரைப்பட வெளியீடு – கர்நாடகத்தில் பாதுகாப்பு கோரி கமல் ஹாசன் மனு தாக்கல்

‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் அமைதியாக வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக, நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பேசும்போது, “கன்னடம் என்பது தமிழ் மொழியிலிருந்து உருவானது” எனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியன.

இதற்கான விளைவாக, கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. சபையின் தலைவர் நரசிம்மலு கூறுகையில், “கமல் ஹாசன் உடனடியாக, 24 மணிநேரத்துக்குள் தனது கருத்துக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் படம் திரையிட முடியாது” என கூறினார்.

மேலும், கன்னட மொழிக்கெதிராக எதுவும் சொல்வதை ஏற்க முடியாது என்றும், கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் நடித்த எந்த திரைப்படங்களும் கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளிக்கப்படாது என்றும் மாநிலத்தின் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில், “தமிழர் மற்றும் கன்னட மக்களுக்கு இடையே நட்பு மற்றும் மரியாதையை வலியுறுத்தும் வகையில் கமல் ஹாசன் பேசியுள்ளார். ஆனால் அவரது பேச்சு தவறாக விளக்கப்பட்டுள்ளது. எந்த நபராலும், அமைப்பினாலும் அல்லது அதிகாரத்தினாலும் திரைப்பட வெளியீடு தடுக்கப்படக் கூடாது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அச்சுறுத்தலின்றி இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக மாற்ற வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் அண்டை மாநிலங்கள். இருநாட்டவரும் நண்பர்களாக இணைந்து வாழ வேண்டும். இந்த விவகாரத்தின் பின்னணியை எனக்கு முழுமையாகத் தெரியாததால், நான் அதில் கருத்து கூற விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box