மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

“மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை குறுகிய அரசியல் பார்வையுடன் அணுகுபவர்கள் மட்டுமே அதை சர்ச்சையாக மாற்றுகிறார்கள்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கல்வி நிதி தொடர்பாக தொடர்ந்து நான் பேசி வருகிறேன். ஆனால், தமிழக அரசு இதை அரசியல் விவகாரமாகக் காட்டுகிறது. இதுகுறித்து நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ளது. அனைவரும் அதை பின்பற்ற வேண்டும். உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் விரும்பினால் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது தமிழைத் தேர்வு செய்யலாம்.

தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் தாய்மொழியுடன் இன்னும் இரண்டு மொழிகளை கற்பது. மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் படிக்கலாம் என்கிறோம். மத்திய அரசு எந்த மாநிலத்திலும் ஒரு மொழியையும் திணிக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கை மூன்றாவது மொழி கற்றலை ஊக்குவிக்கிறது.

மும்மொழிக் கொள்கையை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது. குறுகிய அரசியல் பார்வையுடையவர்கள் மட்டுமே இதனை சர்ச்சையாக்குகிறார்கள். தமிழர்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நானும் என் மொழியை நேசிக்கிறேன். அதேபோல் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன்.

மொழி அடிப்படையில் பிரிவினை செய்ய முயன்றவர்கள் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளனர். சமூகம் அதையெல்லாம் கடந்து சென்றுவிட்டது. தமிழகத்துக்கு எதிராக எங்களிடம் பாகுபாடு இல்லை. மதிய உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கல்வி நிதி தொடர்பாக என்னை சந்தித்த தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி இருவரிடமும், மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சமக்ர சிக்ஷா கல்வி நிதி வழங்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளேன். இது மாணவர்களின் நலனுக்கான விஷயம். இதில் அரசியல் கலந்து விடக்கூடாது.

மூன்று மொழிகளை கற்பதில் என்ன பிரச்சினை? தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது. இவ்விஷயத்தில் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box