தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் இணையமாட்டார் என பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும் போது, அவர் கூறியதாவது:
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பாமக, தேமுதிக, அமமுக மற்றும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்.
விஜய் தேர்தலில் போட்டியிட்டால், திருமாவளவனுக்கு செல்லக்கூடிய வாக்குகளில் சுமார் பாதி விஜயிடம் திருப்பிச் செல்லும். அதேபோல, சிறுபான்மையினர் வாக்குகளும் பெரும்பாலான அளவில் விஜயின் பக்கம் செல்லும் என்பதால், திமுக தரப்பினர் அதைப் பற்றிய கவலையில் உள்ளனர் என்றார்.
விஜய் பாஜக கூட்டணியில் சேர மாட்டார் என்றும், ஒரு நடிகர் கட்சி தொடங்கியவுடன் உடனடியாக கூட்டணி அமைப்பதாகச் சொன்னால் அந்தக் கட்சி பலம் இழக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிரஞ்சீவி, விஜயகாந்த் ஆகியோர் முதலில் தனித்துப் போட்டியிட்டது இதற்கு எடுத்துக்காட்டு என கூறினார்.
விஜய் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பட்சத்தில், விஜயின் கட்சி ஆதரவை இழக்க வாய்ப்புள்ளதாகவும், விஜய் தனித்து நின்றால்தான் வாக்குகளை ஈர்க்க முடியும்; கூட்டணியில் சேர்ந்தால், அவரது ஆதரவு குறையும் என்றும் ராம. சீனிவாசன் கூறினார்.
முன்னதாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சி குள்ளனம்பட்டியில் நடைபெற்றது. இக் கண்காட்சியை ராம. சீனிவாசன் தொடங்கி வைத்து, பின்பு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.