‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட தமிழக பாஜக வலியுறுத்தல்

பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அகிம்சையை போதிக்கும் சிறந்த படைப்பாகிய ‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தியாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கூறியதாவது: தனுஷ் இயக்கி நடித்து வெளியான ‘இட்லி கடை’ தமிழ் திரைப்படம் சமூக, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படைகளை வெளிப்படுத்தும் படைப்பாகும். இது அனைத்து வயதினருக்கும், குறிப்பாக குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கும் அகிம்சை, நேர்மறை எண்ணங்களை போதிக்கும் கலைத்திறன் மிக்க படமாக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள், போதை கலாச்சாரம், பாலியல் சீண்டல்கள், ரத்தம் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் அதிகரித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாயத்தில் தீங்கு விளைவித்து வருகின்ற சூழலில், ‘இட்லி கடை’ திரைப்படம் மனித நேயத்தையும், வாழ்வியல் நோக்கத்தையும் வலியுறுத்தும் படையாக உருவாகியுள்ளது. இதனால் இப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிப்பதை பரிசீலிக்க வேண்டும்.

சிலர், படத்தின் கருத்தை புரியாமையால் அல்லது பழமைவாதத்தைப் போற்றும் நிலையில் விமர்சனம் செய்யலாம். ஆனால் படம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் தீய எதிர்மறை எண்ணங்களை நீக்கி, குடும்ப பாசத்தை, ஆன்மிகம் மற்றும் இறை சிந்தனை வலிமையை வலியுறுத்தியுள்ளது.

அதனால், நல்ல தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு பாரபட்சம் இல்லாமல் வரி விலக்கு வழங்க வேண்டும். இப்படிகளை ஊக்குவித்து மக்கள் அனைவரும் பார்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, ‘இட்லி கடை’ போன்ற நல்ல திரைப்படங்களை தமிழக பள்ளி மாணவர்கள் இலவசமாக காணும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Facebook Comments Box