கரூர் விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடைபட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – அண்ணாமலை
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடைபட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. தமிழக அரசும், காவல்துறையும் இத்தகைய கவனக்குறைவாக செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.
கரூரில் நடைபெற்ற விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் முழு தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அண்ணாமலை கூறியிருப்பதாவது:
- குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
- பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
- உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், பாதுகாப்புக்குத் தேவையான காவல்துறையை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன; இதனால் தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டதாகும்.
அண்ணாமலை மேலும் கூறியிருப்பதாவது:
- திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பி பாதுகாப்பு வழங்குவதும், எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமை வழக்கமாக உள்ளது.
- உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் விபத்து ஏற்பட்டதா, மற்றும் மின்சாரம் தடைபட்டதா என்பதற்கும் முழு விசாரணை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.