WhatsApp Channel
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார்.
உலக கோப்பை தொடரில் இன்று தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும் ஹெட்டும் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 175 ஆக உயர்ந்தபோது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஹெட் சதம் அடித்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களம் இறங்கிய மார்ஷ் 36 ரன்களிலும், ஸ்மித் 18 ரன்களிலும், லாபுசாக்னே 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணைந்தனர். இதில் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹெட் 109 ரன்களும், வார்னர் 81 ரன்களும் எடுத்தனர். அதன்பிறகு 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. வில் யங் 32 ரன்களிலும், கான்வே 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ரச்சின் ரவீந்திரன், டேரில் மிட்செல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் வித்தியாசத்தில் பிரிந்தது. டேரில் மிட்செல் அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். அவர் 89 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் டாம் லாதம் 21 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும், நீஷமின் அதிரடி ஆட்டம் பரபரப்பானது. நீஷம் அதிரடியாக அரைசதம் அடித்து அணியை இலக்கை நெருங்கினார். அவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கடைசி ஓவரில் அவர் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Discussion about this post