புதுச்சேரி பாஜகவில் குழப்பம்: அமைச்சர் ராஜினாமா – அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சமாதானம் செய்ய முயற்சி
புதுச்சேரியில் பாஜக-என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகள், பேரவைத்தலைவர் பதவி வழங்கப்பட்டன. மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்த அமைச்சர் சாய் சரவணக்குமார் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
இது, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை சமாதானப்படுத்தும் முயற்சியாகக் கூறப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர்பதவி வழங்கும் திட்டம் உள்ளது. மேலும், நியமன எம்எல்ஏக்களாக ராஜசேகர், தீப்பாய்ந்தான், செல்வம் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
மாற்றத்தால் பட்டியலின அமைச்சர் சாய் சரவணனின் ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு எதிராக மாறினர். போராட்டங்கள் நடந்தன; பாஜக அலுவலகங்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. “தென்னிந்தியாவில் பட்டியலின சமூகத்திலிருந்து அமைச்சர் பதவியில் இருந்த ஒரே நபர் நீக்கப்பட்டுள்ளார்” என்று ஒருங்கிணைந்த பட்டியலின அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், பாஜகவில் குழப்பம் பெருகி வருகின்றது. அமைச்சரவையில் இருந்து எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீக்கப்படுவதால், அந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைகிறது என்ற விமர்சனங்களும் எழுகின்றன. இந்த நிலை நீடித்தால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.