“ஓபிஎஸ் விலகியதற்கு இபிஎஸ் அழுத்தம் காரணமா?” – நயினார் நாகேந்திரன் விளக்கம்
“பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, ஓ.பி.எஸ் சந்திக்க விரும்பினால், அவருக்கு சந்திக்கும் வாய்ப்பு உறுதியாக ஏற்பாடு செய்யப்படும்” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பி.எஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியதைக் குறிப்பிட்டு கூறியதாவது:
“ஓ.பி.எஸ் கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார் என்பது தெளிவாக இல்லை. அவர் விலகுவதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பும், தினகரனிடமும், அவரிடமும் தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருந்தேன். சட்டமன்றத்திலும் சந்தித்து பேசியுள்ளேன். அவர் எடுத்த முடிவு தனிப்பட்டதா அல்லது வேறு சூழ்நிலை காரணமா என்பது அவருக்கே தெரியும்.
‘மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால்தான் விலகினார்’ என்று சொல்லப்படுவது எனக்குத் தெரியாது. அவர் அதைப் பற்றி என்னிடம் சொன்னிருந்தால், நிச்சயமாக நான் அனுமதி ஏற்பாடு செய்திருப்பேன்.
இபிஎஸ் அழுத்தம்தான் காரணம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. ஓ.பி.எஸ் விலகுவதாக அறிவிக்கும்போதும், அவரிடம் முடிவெடுக்க வேண்டாம் எனக் கேட்டேன். இருப்பினும், அவர் எடுத்த முடிவு அவருக்கே உரியது. இதுவே தேர்தலில் பலவீனமாகுமா என்பது அப்போது தான் தெரியும்.”
ஓ.பி.எஸ் – முதல்வர் சந்திப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,
“முதல்வர் அவரை சந்தித்தது குறித்து எந்த தகவலும் எனக்குத் தெரியாது. அது அவரின் தனிப்பட்ட விஷயமாகவோ, தொகுதி தொடர்பான பிரச்சனையாகவோ இருக்கலாம். நானும் அவ்வப்போது சொந்த விஷயங்களுக்காக முதல்வரை சந்திப்பேன். எனவே, இது குறித்து அவர் விளக்கமளிக்கும் வரை நான் கருத்து சொல்லமுடியாது” என்றார்.