“மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவுக்கு பாஜக துணைபுரிகிறது” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
“மக்கள் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது அதிமுக. அந்தப்பணியில் எங்களுக்கு பாஜக ஆதரவாக நிற்கிறது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.
‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் நடைபெறும் பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மாநில எல்லையில் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரவு 10.15 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தை முடித்தவுடன், கோவில்பட்டிக்குச் சென்றார்.
இன்று காலை செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்பு, தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் சந்தித்து பேசினார். மாலை 5.30 மணியளவில் தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து ரோடு ஷோவும், பயணியர் விடுதிக்குமுன் பிரச்சாரக் கூட்டமும் நடைபெற்றன.
அதில் பேசும்போது அவர் கூறியது:
“திமுக அரசு மக்கள் விரோதமாக செயல்படுகிறது. மக்கள் இந்த ஆட்சி எப்போது முடிவடையும் என எதிர்பார்க்கின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் அதிமுக ஆட்சி ஏற்படும். ஸ்டாலின் எங்கள் கூட்டணியை பார்த்து பதட்டமடைந்துள்ளார். அவருக்குள் பதட்டம் நிலவி வருகிறது. திமுக அரசின் ஆட்சி சிறந்தது என்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது – கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என மூன்று ‘க’ மட்டுமே மிச்சம்.”
அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக வழிகாட்டும் தவறான தகவல்களை அவர் வலியுறுத்தினார்:
“திமுகவுடன் 1999-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி வைத்தது, அந்த அமைச்சரவையில் முரசொலி மாறன் இடம் பெற்றிருந்தார். பாஜக மதவாத கட்சி என சொல்வது ஸ்டாலின் நடத்தும் அவதூறு பிரச்சாரம். இன்று அதிமுக பாஜகவுடன் இருக்கிறது என்பதால் திமுக அவதூறுகளை பரப்புகிறது. ஆனால், அவர்களே ஒருகாலத்தில் பாஜகவுடன் சேர்ந்துள்ளனர். அவர்கள் மதவாத அரசியல் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கொள்கை கிடையாது. ஒத்த கொள்கை இருக்குமென்றால் ஒன்றாகவே இருந்திருக்கலாம். தனித் தனி கட்சிகள் ஏன் இருக்கின்றன?”
தொடர்ந்து, பாஜக தமிழகத்தில் மதவாத கட்சி எனப் பேசும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.
“திமுகவின் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் முறையை மக்கள் விரும்புவதில்லை. சட்டமன்றமும் நாடாளுமன்றமும் கருணாநிதி குடும்பத்தினரால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதுதான் திமுக நோக்கம். இப்போது உதயநிதியை படிப்படியாக துணை முதல்வராக உயர்த்தி அரசியலுக்குத் தயார் செய்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனை இதுதான்,” என்றார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார்:
“மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறும் ஸ்டாலின், கடந்த 16 ஆண்டுகள் மத்திய கூட்டணி அரசில் இருந்தபோது என்ன செய்தார்? அவருக்கு பணம் இல்லையென்றால், கார் பந்தயத்துக்கு செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது? கடலில் 2 கி.மீ. தூரத்தில் ரூ.82 கோடியில் போனாவை வைக்க எங்கே இருந்து பணம் வந்தது?” என்றும் கேட்டார்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் ஆகியவை முறையாக வழங்கப்படும் என்றும், தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
நயினார் நாகேந்திரன் உரை:
இதனைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் கூறியது:
“அதிமுக-பாஜக என்பது இயற்கையான கூட்டணி. அமித் ஷா இந்த கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்துக்கு மக்களிடையே வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த கூட்டணி மக்கள் விரோத திமுக ஆட்சியை மாற்றி அமைக்கும். தமிழகத்தின் நடுவே உள்ள கோவில்பட்டியில் மக்கள் கூட்டமாக திரண்டது, வரவிருக்கும் ஆட்சிக்கான முன்செய்தியாகும்.
மத்திய அரசு, தமிழ்நாட்டுக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் திட்டங்கள் அவரது தமிழ்ப்பற்றையும் காட்டுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்குச் சிலை அமைப்பது கூட பிரதமரின் தமிழ்ப்பற்று, வரலாற்றுப் புரிதலை வெளிப்படுத்துகிறது. இன்று மாநிலத்தில் கஞ்சா, போதை, பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளைகள் அன்றாடமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மாற்றம் அவசியம். அதற்காகவே எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கிறார். இந்த கூட்டணி வெற்றிபெற்று, இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும்” என்றார்.