ஆடிப்பெருக்கு தினத்தில் நதிகளுக்கு ஆரத்தி செலுத்தி வழிபட வேண்டும் – நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

“நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம்” என்ற பரப்புரையின் கீழ், நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு பாஜக இயக்கத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆடிப்பெருக்கு நாளில், நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆரத்தி செலுத்தி வழிபடுமாறு பாஜக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“உயிரினங்களின் அடிப்படைத் தேவையான நீர்வளங்கள் இன்று தமிழ்நாட்டில் பேரழிவை நோக்கி செல்கின்றன. நமது பழம்பெருமை வாய்ந்த ஆறுகள், கழிவுநீரால் மாசடைந்து பரிதாபகரமான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்கால தலைமுறைகளுக்கு ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் காணவே முடியாமல் போகும் அபாயம் உள்ளது.

இதனைத் தடுக்க, பொதுமக்களிடமும், அரசினிடமும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொறுப்பு நமக்கே உரியது. அதற்காகவே, ‘நீர்வளம் காப்போம்’ என்ற தலைப்பில் பாஜக ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பிக்கிறது.”

இந்த இயக்கத்தின் தொடக்கமாக, ஆடிப்பெருக்கு நாளன்று (நாளை),

  • காலை வேளையில் ஈரோடு சங்கமேஸ்வரர் முக்கூடலில்
  • மாலை வேளையில் நெல்லை தாமிரபரணி கரையிலுள்ள தைப்பூச மண்டபத்தில்

நதிகளுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி செலுத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக பாஜகவின் 67 அமைப்பு மாவட்டங்களிலும்:

  • நீர்நிலைகளை சுத்தம் செய்வது
  • மரக்கன்றுகள் நடுதல்
  • மனிதச் சங்கிலி போராட்டம்
  • பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரம்

மற்றும் இவற்றின் இறுதியில், நீர்நிலைகளை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box