மக்கள் நலனில் கவனம் இல்லாத அரசால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது: எல். முருகன் குற்றச்சாட்டு
மக்கள் நலனில் அக்கறை காட்டாத ஆட்சியினால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிட்டது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி ஊர்வலத்தில், பாஜக மாவட்ட தலைவர் தர்மன், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி. வினோத், கூடலூர் எம்எல்ஏ பொன். ஜெயசீலன், முன்னாள் எம்பி கே.ஆர். அர்ஜூணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி சேரங்கிராஸ் பகுதியில் இருந்து கைகளில் மூவர்ணக் கொடியுடன் தொடங்கிய பேரணி, கமர்ஷியல் சாலை வழியாக ஏடிசி சுதந்திர திடலில் நிறைவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் எல். முருகன் கூறியதாவது:
“சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூவர்ணக் கொடி பேரணிகள் நடைபெறுகின்றன. இது, நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், இந்தியாவை வல்லரசாக மாற்றும் நோக்கம், மற்றும் ‘ஒரே நாடு – ஒரே மக்கள்’ என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் நம் நாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளோம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. ஸ்டாலின், முன்னேற்றத்தை பின்தள்ளி விட்டார்; யாரோ ஒருவரின் இயக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளார். இப்போது மக்களிடம் நேரடியாக முகாம் நடத்துகிறார்; இதுவரை அவர் யாருடன் இருந்தார்?
மக்கள் நலனில் அக்கறையில்லாத இந்த ஆட்சியால் மாநிலம் முழுவதும் லஞ்சம், போதைப்பொருள் பரவல், கொலை, கொள்ளை அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை; புகார் அளிப்பவர்களே தாக்கப்படுகிறார்கள். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கு முறையே கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்றார்.