இன்று சென்னை வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் – ஓபிஎஸ் உடன் சந்திப்பு திட்டம்

புதிய மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இன்று (ஆகஸ்ட் 10) தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடனும் (ஓபிஎஸ்) சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அவரைச் சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் சந்திப்பு நடைபெறாததால், ஓபிஎஸ் தரப்பில் அதிருப்தி நிலவியது. அதிமுக–பாஜக கூட்டணி ஏற்பட்ட பின்னரும், ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூலை 31 அன்று பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

அன்றைய தினமே அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினை இருமுறை சந்தித்தார். பின்னர், பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸை தொடர்பு கொண்டு, அவசரப்பட வேண்டாம் என அறிவுறுத்தி, மீண்டும் கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர்.

இதற்கிடையில், இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பி.எல். சந்தோஷ், பல்வேறு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளார்.

அதே சமயம், ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாஜகவினர், பி.எல். சந்தோஷ் – ஓபிஎஸ் சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து பேசியுள்ளனர். மேலும், வரும் ஆகஸ்ட் 26 அன்று பிரதமர் மோடி சென்னை வரும்போது, அவர் மற்றும் ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து “தற்போது எதையும் கூற முடியாது, நிர்வாகிகளுடன் ஆலோசித்து பின்னர் முடிவு தெரிவிப்பேன்” என்று ஓபிஎஸ் பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box