வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு இலவச பாடநூல் வழங்கல் நிறுத்தம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்
வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த தமிழ் பாடநூல்களை இலவச விநியோகம் செய்வதை நிறுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“சுமார் நாற்பது ஆண்டுகளாக வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப்பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நிதி நெருக்கடி என்ற காரணத்தைக் காட்டி, இந்த திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது.
ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் அவதியுறும் அயல் மாநில தமிழ்ச்சங்கங்களின் மீது கூடுதல் நிதிசுமை ஏற்றுவது நியாயமா? இதனால் மிக அதிகம் பாதிக்கப்படுவது, அயல் மாநிலங்களில் தமிழ் கற்கும் ஏழை எளிய தமிழ் வம்சாவளி மாணவர்களே. இது தெரியாதா?
தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட திராவிட மாடல் இதுவா? கோபாலபுரம் தலைமுறையினர் பேனா சிலை, கார் ரேஸ், பிரச்சார நடனம், விளம்பரங்கள் போன்ற செலவுகளுக்கு நிதி வீணடிக்கும் போது, வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ் மாணவர்களின் நலனும், தமிழ் வளர்ச்சியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்களுக்கு புலப்படாதது ஏன்?
அன்னைத் தமிழின் வளர்ச்சியை அரசியலைத் தாண்டி உண்மையாகவே விரும்பினால், திமுக அரசு உடனடியாக இந்த முடிவை ரத்து செய்து, வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு பாடநூல்களை வழக்கம்போல இலவசமாக வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.