நெல்லையில் ஆகஸ்ட் 22-ல் பாஜக பூத் கமிட்டி மாநாடு: அமித் ஷா பங்கேற்பு
நெல்லையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் தென் மாவட்டங்களில் உள்ள பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு ஆகஸ்ட் 17-ம் தேதி (இன்று) நெல்லையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் நேற்று முன்தினம் மாலை காலமானதையடுத்து, அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அன்று கேரளாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அமித் ஷா, அங்கிருந்து நெல்லை வந்து மாநாட்டில் கலந்து கொள்வார். அப்போது, தமிழக பாஜக தலைவர்களுடன் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை அவர் மேற்கொள்ள உள்ளார் என்று பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.