புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முதல்வர் ரங்கசாமிக்கு பாஜக மாநிலத் தலைவர் ஆலோசனை
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று கோரிக்கை வைத்தால் வழங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இது தமிழர்களுக்கு பெருமையாகும். பாஜகவில் சாதாரண தொண்டனாக இருந்தவர் கூட மிக உயர்ந்த நிலைக்கு சென்று சேர முடியும் என்பதற்கான சான்று இதுவாகும்.
பிரதமர் தமிழகத்தை எவ்வளவு அக்கறையுடன், பாசத்துடன் அணுகுகிறார் என்பதை இதுவே வெளிப்படுத்துகிறது. முன்னதாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்தது அனைவருக்கும் தெரியும்.
மூப்பனார் பிரதமராவதற்கான வாய்ப்பு வந்தபோது திமுக அதற்கு தடை செய்ததால் அது சாத்தியமாகவில்லை. அப்படிப்பட்ட தவறு இப்போது நடக்கக் கூடாது. எந்த வகையிலும் பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதையும் இந்த நிகழ்வு வெளிச்சமிடும்.
தேசத் தலைவர்களை இழிவுபடுத்திப் பேசுவது முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு பழக்கமாகிவிட்டது. எந்த அரசியல் அறிவும் இன்றி வீரசாவர்கர் குறித்து தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார். பாஜக-என்.ஆர். காங்கிரஸ் தான் வெளிப்படையான எதிரி, ஆனால் மறைந்திருக்கும் எதிரிகளும் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் அவருடைய கட்சியிலேயே உள்ளவர்களா அல்லது கூட்டணி கட்சியில் நம்பிக்கையின்மை நிலவுகிறதா என்பது புரியவில்லை. அவருக்கே தனது கட்சியின்மீது சந்தேகம் உள்ளது போல தெரிகிறது.
நாங்கள் உறுதியான நோக்கத்துடன் அனைத்து சாதனைகளையும் முடித்து தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.
தொகுதி ஒதுக்கீடு குறித்து எங்கள் தேசியத் தலைமையும் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். அமைச்சர் ஜான் குமாருக்கு துறை ஒதுக்கீடு செய்வது குறித்தும் முதல்வருடன் விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி மக்களின் ஒரே விருப்பம் மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதே. அதனை முதல்வர் டெல்லி சென்று கேட்டால் நிச்சயமாக வழங்கப்படும்” என்று அவர் கூறினார். அப்போது மாநிலச் செய்தித் தொடர்பாளர் அருள் முருகன், ஊடகப் பிரிவு தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.