தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்: அதிமுக, பாஜக வலியுறுத்தல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்: “தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது அவரது மக்கள் சேவைக்கும், சமூகப் பங்களிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசிய தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கட்சியினரும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: “தமிழகத்தின் மகன் சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இது அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஆதரிக்க வேண்டிய பெருமை. ஒரு தமிழருக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரத்தை எல்லா கட்சிகளும் இணைந்து ஆதரிப்பது நல்ல அரசியலுக்கு உதாரணமாக இருக்கும்.” என வலியுறுத்தினார்.
பாமக தலைவர் அன்புமணி: “பொதுவாழ்வில் எந்த விவகாரத்திலும் சிக்காதவர் சி.பி. ராதாகிருஷ்ணன். மாநிலங்களவையை வழிநடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும், சகல கட்சியினரையும் இணைத்து செல்லும் திறனும் அவரிடம் உள்ளது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் செயல்படுவார் என்பது உறுதி.” என பாராட்டினார்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: “அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் ராதாகிருஷ்ணன். எந்த பொறுப்பையும் ஏற்றாலும் தனித்துவத்தை நிரூபித்தவர். எனவே, தமிழக கட்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவு அளிப்பது தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும்.” எனக் குறிப்பிட்டார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “நாட்டையும் மக்களையும் அன்புடன் நேசிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகி மக்களுக்கான பணிகளை தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என தெரிவித்தார்.