குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் ராஜ்நாத் சிங்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் மகாராஷ்டிரா ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணத்தால் தனது பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதையடுத்து, அதுகுறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் செயல்பாடுகளைத் தொடங்கியது. போட்டி இருந்தால் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை (542 எம்.பி.க்கள் – 1 இடம் காலி) மற்றும் மாநிலங்களவை (239 எம்.பி.க்கள் – 6 இடங்கள் காலி) உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். தற்போதைய சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், அவர்கள் வேட்பாளருக்கு வெற்றி உறுதி என கருதப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ராதாகிருஷ்ணனுக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதேசமயம், அதிமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள், மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரிக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டுள்ள ராஜ்நாத் சிங், பல மாநில முதல்வர்களுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறார். அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தேர்தலில் ஆதரவு தர வேண்டும்” என கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்களுடனும் அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் தலைவர்களிடமும் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில், “எதிர்காலத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராகவும் உயர்வார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box