“திமுக ஊழலுக்கு முடிவுகட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி” – நெல்லையில் அமித் ஷா
“நாட்டின் மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால், அது திமுக ஆட்சி தான். ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் செய்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போது இதற்கு முடிவு கட்டப்படும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் நடந்தது. அந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா கூறியதாவது:
“பெருமை மிக்க தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் நேரடியாக பேச முடியாமல் இருப்பதற்கு வருத்தப்படுகிறேன். வீரம், பண்பாடு, வரலாறு, கலாசாரம் நிறைந்த இந்தத் தமிழ்மண்ணை நான் வணங்குகிறேன்.
நாகாலாந்தின் முன்னாள் ஆளுநராக பணியாற்றிய இல. கணேசன் மறைந்துவிட்டார். தனது வாழ்க்கையே பாஜகவுக்காக அர்ப்பணித்தவரான அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்; அவரது ஆன்மா இளைப்பாற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக முன்னிறுத்தியதில் பெருமை அடைய வைத்த பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் நட்டாவுக்கும் நன்றி கூறுகிறேன். மக்களவை மீண்டும் தொடங்கியதும் மாநிலங்களவைக்கு தலைவராகப் பொறுப்பேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன். இது தமிழ் மண்ணின் பெருமையை வெளிப்படுத்துகிறது.
தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி உணர்கிறார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு சிலை நிறுவ உத்தரவிட்டதோடு, கங்கை நீரால் பிரதீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வரலாறு படைத்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளை 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கவும் காரணமாக இருந்துள்ளார்.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் மதத்தின் பெயரில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றனர். ஆனால், ஆபரேஷன் சிந்தூர் மூலம் அவர்களுக்கு தகுந்த பதிலடி அளித்து மோடி, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்துள்ளார். நல்லாட்சிக்கான நான்கு வழிகளை திருவள்ளுவர் சொன்னார் – அருமையான குடிமக்கள், வலிமையான சேனை உள்ளிட்டவைகளை. அவற்றின் படியே மோடி ஆட்சி செய்கிறார்.
சமீபத்தில் மக்களவையில் கொண்டுவரப்பட்ட மசோதா படி, பிரதமர் அல்லது முதல்வர் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களின் பதவி நீங்கிவிடும். ஆனால், அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்தனர். சிறையில் இருந்தே ஆட்சி செய்வது சாத்தியமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
இந்த புதிய மசோதாவை ‘கருப்புச் சட்டம்’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதற்கு அவருக்கு உரிமை இல்லை. நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆட்சி திமுக ஆட்சிதான். டாஸ்மாக், எல்காட், போக்குவரத்து துறை, இலவச வேட்டி – சேலை, வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகின்றனர். வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
திமுகவும், காங்கிரஸும் தங்களது வாரிசுகளை பதவியில் அமர்த்த முயற்சிக்கின்றன. ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும், சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்கவும் நினைக்கிறார்கள். ஆனால், அந்த கனவு ஒருபோதும் நனவாகாது. தமிழகத்தில் திமுக கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக தோற்கடிக்கும்.
இம்மாநாட்டில் 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 7980 பூத்களில் இருந்து வந்தவர்கள். கடந்த தேர்தலில் பாஜக 18% வாக்குகளையும், அதிமுக 21% வாக்குகளையும் பெற்றது. இரண்டும் சேர்ந்தால் நிச்சயம் வெற்றி நமதே. தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல, அது முன்னேற்றக் கூட்டணி. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும்.
போட்டி போட்ட இடமெல்லாம் பாஜக வெற்றியடைந்து வருகிறது. அதற்கு பூத் கமிட்டி உறுப்பினர்களே காரணம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும், வீடு வீடாகச் சென்று பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும்.
ஒவ்வொரு பூத்திலும் வெற்றியை உருவாக்கும் பொறுப்பு நிர்வாகிகளிடம் உள்ளது. அதனால், அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்” என்று அமித் ஷா கூறினார்.