குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியே வெற்றிபெறும்: ஹெச்.ராஜா
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும், எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“பிரதமர் மோடி எப்போதும் தமிழ்நாட்டின் மீது மரியாதையும் பாசமும் கொண்டவர். இந்திய பிரதமர்களில் அதிக முறை தமிழகத்திற்கு வந்து மக்களுக்கு பல உதவிகள் செய்தவர் மோடி. சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்தபோது ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். தற்போது குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளார். அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் மாநிலங்களவை, மக்களவை சேர்த்து 57 எம்.பிக்கள் உள்ளனர். தமிழர்கள் ஒருமித்து செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் அல்லது நிறுத்தப்பட்டாலும், எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றிபெறும்.
1996 ஆம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரசில் பலர் ஜி.கே. மூப்பனார் பெயரை முன்மொழிந்தனர். ஆனால் அது நிகழவில்லை. ஆர். வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் குடியரசுத் துணைத் தலைவராக வரவில்லை. இதனால் திமுக எம்.பிக்கள் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.