விஜய் சினிமா அரசியல்வாதியாக அல்லாது மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்: பாஜக
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்,
“‘தனி மனிதன் அல்ல, பெருங்கடல் நான்’ என்ற வாசகத்துடன் ‘உங்கள் விஜய் – எளியவனின் குரல் நான்’ என சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்த நடிகர் விஜய், முதலில் திருவள்ளுவரின் திருக்குறளையும், டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறையும், இந்திய அரசியல் சட்டத்தையும், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா எழுதிய ஏகாத்ம மாணவ தார்ஷன் நூலையும் ஆழமாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
திரை உலகப் புகழைப் பயன்படுத்தி அதிகார அரசியலுக்காக, முதல்வர் ஆசனத்தை கனவாகக் கொண்டு, முழுநேர அரசியல் நடிகராக நடந்து கொள்வது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடு உள்ளிட்ட இடங்களில் விஜய் பேசிய உரைகள் திரைப்பட வசனங்களைப் போன்று இருந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் அரசியலில் வருவது வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் பாஜக விஜயை ஏற்றுக்கொண்டது. மத்திய அரசின் திட்டங்களை, குறிப்பாக மாணவர்களின் நலனை கருதி கொண்டுவரப்பட்ட நீட் திட்டத்தை, தவறாக விமர்சித்த போதிலும், பாஜக தெளிவான விளக்கங்களையே அளித்து வந்தது. புதியவராக இருப்பதால் அரசியலை விரைவில் புரிந்து கொள்வார் என பொறுமையாகக் காத்திருந்தோம். ஆனால், மதுரை உரையில் தேர்தல் நலனுக்காகவே விஜய் பேசியது தெளிவாகியுள்ளது.
மாநாட்டின் பிரமாண்டம், மேடையில் தன்னை முதல்வர் வேட்பாளராக காட்டும் விதம் – இவை எல்லாம் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல், வெறும் விளம்பர அரசியலாகவே இருக்கிறது. மக்கள் எதிர்நோக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றைப் பற்றி அவர் பேச வேண்டும்.
விஜய், கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே முதல்வர் கனவு காண்கிறார். ஆனால் அரசியல் முதிர்ச்சி இல்லாமல், எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை பேசி வருவது கண்டிக்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியை “மிஸ்டர் பி.எம்” என்றும், முதல்வர் ஸ்டாலினை “அங்கிள்” என்றும் அழைத்து தரம் தாழ்த்திப் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது.
திரையுலகில் ரசிகர்களின் பணத்தில் கோடி கணக்கில் சம்பாதித்து, முன்னாள் தலைவர்களின் ஆதரவில் வாழ்ந்தவர் இன்று மக்களின் இரட்சகராக நடிக்க முயல்வதை மக்கள் மறக்கமாட்டார்கள். சிறுவயதில் பெற்றோர் விரும்பியபடி நல்ல நடிகராக உயர்ந்தவர் விஜய்; ஆனால் இன்னும் மக்கள் நல அரசியல்வாதியாக உயரவில்லை என்பதை உணர வேண்டும்.
அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற தலைவர்களின் தியாகங்களையும், மக்களுக்காக செய்த சேவைகளையும் படிக்காமல், வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக நாடகம் ஆடுவது வெளிப்பட்டுவிட்டது. இனியாவது வெளிநாட்டு மிஷனரிகளுக்குப் பிடித்த முறையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளை குறைகூறுவதை நிறுத்தி, தனது இளைஞர் ஆதரவாளர்களை நல்வழியில் நடத்த வேண்டும்.
இனி விஜய், காலை முதல் இரவு வரை தனது சிந்தனையையும் உழைப்பையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டும். திமுகவின் தவறுகளை வெளிக்கொண்டு வந்து, மக்களின் உரிமைக்காக போராடும் அரசியல்வாதியாக உயர வேண்டும்.
மட்டுமல்ல, வருங்காலத்தில் தேசிய அரசியலிலும், தமிழக மக்களின் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையை பெறும் தலைவராக விஜய் உருவாக பிரார்த்திக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.