தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடிக்கு 2,200 மெகாவாட் மின்சாரம் வாங்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஆட்சிக்கு வரும் முன்பு திமுக, ‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து, மாசற்ற மின் நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கப்படும்’ என்று வாக்குறுதி (எண் 231) அளித்தது.
ஆனால் ஆட்சி பிடித்ததும், அதற்கு முற்றிலும் மாறாக மின்வாரியத்தை நஷ்டத்தில் தள்ளி, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி, விலையை உயர்த்தி, மக்களுக்கும் அரசுக்கும் கூடுதல் சுமையைக் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தின் கடனும், மக்களின் மின்கட்டணச் சுமையும் ஒன்றாக அதிகரித்து, தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு ‘விடியல் அரசு’ என்று பெருமை பேசுகிறது.
மேலும், மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு என்ற வாக்குறுதியை மறந்து, மக்கள் நலனை புறக்கணித்த திமுக அரசு, தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடிக்கு மின்சாரம் வாங்கும் திட்டத்தையும் எளிதில் கைவிடக்கூடும். எனவே, தனியாரிடம் மின்சாரம் வாங்கும் திட்டம் இருந்தால் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.