“தோல்வியால் மனம் தளரக் கூடாது!” – அண்ணாமலை அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேற்றைய போட்டியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“விளையாட்டில் சிறந்து விளங்கியபோலவே, படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தோல்வி ஏற்பட்டுவிட்டால் மனம் உடைந்து விடக் கூடாது. அந்தத் தோல்வி ஒருநாள் நிச்சயம் வெற்றியாக மாறும். அதுவரை இடைவிடாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
பதக்கம் பெற்ற சூரிய ராஜ பாலு:
வெற்றியாளர்களுக்கு அண்ணாமலை பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார். ஆனால் அமைச்சர் டிஆர்பி. ராஜாவின் மகன் சூரிய ராஜ பாலு, பதக்கத்தை கழுத்தில் அணியாமல் கையில் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு, அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றார்.