அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க அழைப்பு – ஹெச். ராஜா
அமெரிக்க தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கேட்டுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் கையெழுத்திடப்பட்ட ‘GATT’ ஒப்பந்தம் பொருள் இழந்ததாகிவிட்டது.
நாட்டு மக்கள் சுதேசி உற்பத்திப் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அமெரிக்க தயாரிப்புகளை, குறிப்பாக ஆன்லைன் மூலம் வாங்க மாட்டோம் என்று அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைக்கு, நாம் பொருளாதார ரீதியாகவே பதிலளிக்க வேண்டும். பிற நாடுகளுடன் வணிக உறவுகளை விரிவுபடுத்தினால், அமெரிக்க வரி காரணமாக ஏற்படும் இழப்புகளை சமாளிக்கலாம்.
மேலும், ஜிஎஸ்டி வரி முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை வாக்குகளையே போதுமானதாகக் கருதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செயல்படுகிறார் என்பது அவரது அணுகுமுறையிலிருந்து தெளிவாகிறது” என ஹெச். ராஜா தெரிவித்தார்.