“ஆளுமை மிக்க மூப்பனார் பிரதமராக வருவதைக் கெடுத்தது, தமிழகத்துக்கு நடந்த மிகப்பெரிய துரோகம்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையின் தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில், அவரது 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
“மூப்பனார் எளிமை, நேர்மை, தேசிய உணர்வு கொண்ட தலைவராக இருந்தார். நாடு முழுவதும் அவருக்கு மதிப்பு இருந்தது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பிரதமராகும் வாய்ப்பு உருவானது. ஆனால் அந்த வாய்ப்பை சிலர் தடுத்து விட்டனர். அவர்கள் யார் என்பது நமக்குத் தெரியும்.
தமிழ், தமிழர், தமிழ் கலாச்சாரம் எனப் பேசி வரும் சிலர், தமிழர் பிரதமராகும் தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர். இது மறக்க முடியாத ஒன்று. மூப்பனாரின் பிரதமர் ஆவதை தடுத்ததே தமிழகத்திற்கு நடந்த துரோகம்.
இங்கு அரசியல் பேச வேண்டிய இடம் அல்ல, ஆனால் உண்மையைச் சொல்வது அவசியம். இன்று நாம் செய்ய வேண்டியது, மூப்பனாரின் கொள்கைகளை பின்பற்றி நல்லாட்சியை நிலைநாட்டுவதுதான். 2026 தேர்தலில் தமிழகத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு குடும்பமே பயனடைகிறது, மக்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
எல்லா தலைவர்களும் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கூட்டணியின் மூலமாக மக்களுக்கு தொண்டாற்றுவதே எங்கள் கடமை. சிறிய உட்பிரிவுகளைப் பற்றி கவலைப்படாமல், முதிர்ச்சியுடன், பக்குவத்துடன் நாம் செயல்பட வேண்டும்” என்றார்.