மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்யபட்ட மிகப்பெரிய துரோகம் என்று கூறியுள்ளார்.

தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிர்மலா சீதாராமன் பேசியதாவது: “எளிமை, நேர்மை, தேசிய பண்புகளுடன் கூடிய மூப்பனார், காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர். நாடு முழுவதும் மதிப்பும் மரியாதையும் பெற்றவர். பிரதமராக வர வாய்ப்பு இருந்தும், அவரை தடுத்த சக்திகள் யார் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். அப்போது தமிழரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். தற்போது 2026 தேர்தலில் மாற்றம் தேவை. அனைவரும் ஒன்றிணைந்து நல்ல ஆட்சிக்காக முயற்சிக்க வேண்டும்.”

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மூப்பனாரின் பண்புகளை எடுத்துரைத்து: “மூப்பனார் காங்கிரசில் இருந்தபோது தேசிய அளவில் தனி முத்திரை பதித்தவர். எளிமை, அன்பு, மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் பண்புடன் இருந்தவர். வாழ்நாளை தேசத்துக்கும் மக்களுக்காக அர்ப்பணித்தவர்.”

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “மூப்பனார் நினைவு நாளில் எண்டிஏ தலைவர்கள் கலந்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இது 2026 ஆட்சி மாற்றத்தின் அடித்தளம். ஒன்றுபட்டு வெற்றி காண்போம்” என்றார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அனைவரும் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை வீட்டு அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழகத்திலும் இந்தியாவிலும் வழங்க வேண்டும். 2026 சட்டப்பேரவையில் மாற்றம் தேவை. கூட்டணி மூலம் மாற்றமும், புரட்சியும் ஏற்பட்டு ஏழைகளுக்கு விடிவெள்ளி அரசு உருவாகட்டும்” என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன், “முதலீடுகளை ஈர்ப்பது பிரதமர் மோடிதான். உலகளவில் பாரதத்தின் பெருமையை உயர்த்தியதால் தமிழகத்திற்கு முதலீடு கிடைக்கிறது. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தார்கள். திமுக ஆதரவு இல்லாததால் பொய் முகம் கிழிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், “விஜயகாந்த், மூப்பனாருடன் 40 ஆண்டுகள் நட்பு கொண்டவர். 2026-ல் தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

நினைவு நாள் நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன், பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தபோது, அண்ணாமலை அருகில் வந்து நிற்க அழைக்கப்பட்டார். பின்னர், இருவரும் மேடையில் அருகில் அமர்ந்து, பிறகு பழனிசாமி புறப்பட்டுச் செல்லும்போது அண்ணாமலைக்கு கைகொடுத்து சென்றார்.

இதன் மூலம், பழனிசாமி – அண்ணாமலை இடையேயான மோதல் போக்கு நிலவிய நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களில் இருவரும் ஒன்றாக இருந்தது.

Facebook Comments Box