தமிழக பாஜக உள்கட்சி தகராறு, வார் ரூம் சர்ச்சைகள்: டெல்லியில் செப்டம்பர் 3-ம் தேதி உயர்மட்ட குழு கூட்டம்
செப்டம்பர் 3-ம் தேதி டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவின் உள்கட்சி முரண்பாடுகள், வார் ரூம் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழக பாஜகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரமாகி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையேயான முரண்பாடு நீடித்து வருவதாகவும், சமீபத்தில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் “மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்விக்கு அண்ணாமலையே காரணம்” என்று நிர்மலா சீதாராமன் மறைமுகமாக குற்றம்சாட்டியதாகவும் செய்திகள் பரவின. இதற்கிடையே, அண்ணாமலை – நயினார் நாகேந்திரன் இடையேயான வார் ரூம் மோதலும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சில பாஜக நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்காமல் தவிர்த்து வருவதாகக் கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தல் காலத்தில் இவ்வாறான உள்கட்சி பிரச்சினைகள் வெளிப்படையாகி, கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காகவே டெல்லியில் அவசரமாக இந்த உயர்மட்ட குழு கூட்டத்தை தேசிய தலைமை அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்திலிருந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி ஒருங்கிணைப்பு, தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்துக் கொள்வது, பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் சாதகமான தொகுதிகளைத் தேர்வு செய்தல், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தல், தகுதியான வேட்பாளர்களை குறிவைத்தல் உள்ளிட்ட விடயங்கள் கூட்டத்தில் பேசப்படவிருக்கின்றன.
முக்கியமாக, தமிழக பாஜகவில் நீடித்து வரும் உள்கட்சி முரண்பாடுகள், நிர்மலா சீதாராமன் – அண்ணாமலை இடையேயான பிளவு, அண்ணாமலை – நயினார் நாகேந்திரன் வார் ரூம் சண்டை ஆகியவற்றுக்கு தீர்வு காண்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் மற்றும் பாஜக தேசிய தலைவர் தேர்தலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், திடீரென இவ்வாறு உயர்மட்ட குழு கூட்டம் அழைக்கப்பட்டிருப்பது, பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.