புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – நகரம் முழுவதும் கடும் நெரிசல்

ஒருபுறம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாஜகவினர் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மறுபுறம், பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பிஹாரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவமதிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சுதேசி மில் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், அமைச்சர் ஜான்குமார், எம்எல்ஏக்கள் சாய் சரவணன் குமார், கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுதேசி மிலிலிருந்து தொடங்கிய பேரணி அண்ணாசாலை வழியாக நகர்ந்தது. காமராஜர் சிலையைத் தாண்டியவுடன் அண்ணாசாலை – கொசக் கடை வீதி சந்திப்பில் தடுப்புகள் அமைத்து போலீஸார் போராட்டக்காரர்களைத் தடுத்தனர். தடுப்புகளை மீற முயன்ற பாஜகவினர் ராகுலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சிலர் ராகுல் புகைப்படங்களை கிழித்து எறிந்ததோடு, தீ வைத்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து அண்ணாசாலையில் வேனின் மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் பேசியதாவது:

“இது ஆரம்பம் மட்டுமே. விரைவில் பாஜக எழுச்சி மாநாடு நடைபெறும். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறும் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள். உக்ரைனில் நடிகர் ஆட்சிக்கு வந்ததால் தான் அந்நாடு சீரழிந்தது. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரடியாக சவால் விடக் கூடிய ஒரே தலைவர் நரேந்திர மோடி தான்.

சரியான தலைவரை தேர்வு செய்வது அவசியம். கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி பெரும் சிக்கலில் சிக்கியது. நாங்கள் வாக்குப் பெட்டி திருடவோ, ஊழல் செய்யவோ போவதில்லை. இன்னும் மூன்று ஆண்டுகளில் மோடி ஆசிரமம் செல்வார். அவருக்கு குடும்ப சுவாரஸ்யம் எதுவும் இல்லை. அவர்மீது லஞ்சம் வாங்கினார் என யாராலும் கூற முடியாது. நாங்கள் திராவிட மாதிரி ஆட்சியை நடத்தவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றதால் புதுச்சேரிக்கு எந்த நன்மையும் இல்லை. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். ரங்கசாமி முதல்வராகவும், அதிமுகவின் ஆதரவுடன் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகவும் உருவாகும்,” என்றார்.

இதேவேளை, காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள கலவை சுப்பராயசெட்டித் தெரு – அண்ணாசாலை சந்திப்பில் எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்ட காங்கிரஸார் திரண்டு, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர். அவர்களையும் போலீஸார் தடுப்புகளால் தடுத்தனர். இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Facebook Comments Box