டிஎன்பிஎஸ்சி கேள்வி அமைப்பில் அலட்சியம்: அண்ணாமலை கண்டனம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கேள்வி தயாரிப்பில் கவனக்குறைவு காட்டப்படுவதாக, தமிழக அரசை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இளநிலை உதவி வரைவாளர் பணியிடத் தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் “முடிசூடும் பெருமாள்” என்பதற்கு The God of Hair Cutting என்று தவறாக மொழிபெயர்த்திருப்பதை கண்டித்தார். இது மிகுந்த அலட்சியத்தையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது என்றார்.
மேலும், “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடர்பான கேள்வியில், ‘2024 ஆம் ஆண்டு ஐ.நா. சபையிடமிருந்து விருது பெற்றது’ என்பதற்குப் பதிலாக, It begged the United Nations Award (யாசித்துப் பெற்றது) என்று தவறாக மொழிபெயர்த்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது எனக் கூறினார்.
திமுக தலைவர்கள் அடிக்கடி இல்லாத விருதுகளை வாங்கியதாகப் பேசிவருவதால் கேள்வி அமைப்பாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இத்தகைய தவறுகள் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை விளையாட்டாகக் கருதுவதை காட்டுகிறது.
“கோபாலபுரம் குடும்பம் போல் தகுதியின்றி முன்னேற விரும்புபவர்கள் அல்ல, தமிழக இளைஞர்கள். அவர்கள் கடுமையாக உழைத்து அரசுப் பணிகளில் சேரும் நிலையை அவமதிக்காதீர்கள். இத்தகைய கவனக்குறைவு நிறுத்தப்பட வேண்டும்” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.