“காவிரிக்கு குறுக்கே தடுப்பணை கட்ட நிதி இல்லையா?” – திமுக அரசை கேள்வி கேட்கும் பாஜக
காவிரி நதிக்கு குறுக்கே தடுப்பணை அமைக்க நிதி இல்லையா என்று தமிழக பாஜக, திமுக அரசை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தக் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கரூர் மாவட்ட மருதூர் மற்றும் திருச்சி மாவட்ட உமையாள்புரம் இடையே காவிரிக்கு குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது, டெல்டா விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும்.
2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில், மருதூர் – உமையாள்புரம் இடையே ரூ.750 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆட்சியில் வெளியிடப்படும் பல அறிவிப்புகள் போலவே, இதுவும் நடைமுறைக்கு வராமல் போய்விட்டது.
சமீபத்தில், காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்ததற்கு பதில் அளித்த நீர்வளத் துறையின் சிறப்புத் திட்டங்கள் பிரிவு நிர்வாகப் பொறியாளர், நிதி பற்றாக்குறையால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது நிதி இல்லை என்று கூறுவது எவ்வளவு பொருத்தமற்றது?
விவசாயத்துக்கே தனி பட்ஜெட் வைத்திருப்பதாக பெருமைபடும் இந்த அரசுக்கு, ரூ.750 கோடி திட்டம் ஏன் சுமையாகிறது? அறிவிப்புகளை மட்டுமே குவிக்கும் இந்த ஆட்சியின் பார்வையில், விவசாயிகள் எப்போதுமே புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
அதேநேரத்தில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி கரூரில் ‘முப்பெரும் விழா’ என்ற பெயரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மேடையேறவிருக்கிறார். விளம்பரங்களுக்கு அரசு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது. அந்த நிதியை விவசாயிகளின் தடுப்பணை திட்டத்திற்காக ஒதுக்க முடியாதா?
காவிரியில் தடுப்பணை அமைக்க வல்லமையில்லாத திமுக அரசு, காவேரிக் கரையில் கரூரில் விழா நடத்துவது ஒரு போலியான நிகழ்ச்சி அல்லவா?” என்று ஏ.பி. முருகானந்தம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.