டெல்லியில் பாஜக உயர்மட்டக் கூட்டம் – தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி முரண்பாடுகளை தீர்க்க அமித் ஷா உத்தரவு

டெல்லியில் பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் சூழ்நிலை நெருங்கியுள்ளதால், தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷா இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, எல். முருகன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவில்லை.

இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

அதில் அதிமுகவுடன் மட்டுமே இருக்கும் தற்போதைய கூட்டணியை விரிவாக்கி, மேலும் பல கட்சிகளை இணைத்து ‘மெகா கூட்டணி’ அமைக்க வேண்டும் என்ற வியூக ஆலோசனைகளை அமித் ஷாவும் ஜே.பி. நட்டாவும் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், 234 தொகுதிகளுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, அதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள், பாஜக வாக்கு வங்கியை அதிகரிக்கும் வழிகள், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் கவுண்டர் சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் கால அட்டவணை உள்ளிட்டவை ஆராயப்பட்டன.

கூட்டத்தின் போது, தமிழக பாஜகவில் அணி – அணியாகப் பிரிந்து நிற்காமல் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும், உட்கட்சி முரண்பாடுகளை உடனடியாக களைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அமித் ஷா கண்டிப்பாக அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குமீதும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை முன்னிறுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைப்பதோடு, பொதுக்கூட்டங்கள் நடத்தி அவரை பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Facebook Comments Box