பயண ஆவணங்கள் இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு தண்டனை விலக்கு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி
பயண ஆவணங்கள் இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்கு வழங்கப்படும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இதற்காக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றியை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது:
2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்னர், இலங்கையில் நீண்டகாலமாக நடந்த உள்நாட்டு போரில் இருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது விசா போன்ற பயண ஆவணங்கள் இல்லையெனில், நாட்டின் சட்டப்படி அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையில் இருந்து, மனிதாபிமான அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது.
இது, நமது நாட்டில் அடைக்கலம் தேடிய இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இந்திய குடியுரிமை கோரிக்கைக்கான முதல்படியாக அமைந்துள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் மக்களின் நலனில் அக்கறை காட்டும் வகையில் இந்த அறிவிப்பை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கைத் தமிழர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.