பாஜக கூட்டணியில் நடக்கும் சில நிகழ்வுகள் திருப்தியளிக்கவில்லை – அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் கூட்டணிக்குள் இடம்பெறும் சில செயல்பாடுகள் திருப்தி தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் ஒரே நோக்கம். 2024-ல் உருவான பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இணைந்தன. தமிழகத்தில் இதற்கு முன் இல்லாத அரசியல் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதுவரை இருமுனை போட்டியாக இருந்த தமிழக அரசியலில், மூன்றாவது அல்லது நான்காவது அணியின் வாய்ப்பு இருக்கிறதா என்பது அடுத்த 3–4 மாதங்களில் தெளிவாகும்.
இந்நிலையில், 2026 தேர்தலை நோக்கி கூட்டணியில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக கூட்டணிக்குள் நடக்கும் சில நிகழ்வுகள் சலிப்பையும், திருப்தியின்மையையும் ஏற்படுத்துகின்றன. இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
புதிய கட்சிகளை அழைத்து சேர்ப்பதை விட, தற்போதைய கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம்,” என்று கூறினார்.