தமிழகத்தில் 4 நகரங்களில் பாஜக பிரம்மாண்ட மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்பு முயற்சி
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பாஜக பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி அதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 13-ஆம் தேதி மதுரையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. அதன்பின் அக்டோபர் 26-ஆம் தேதி கோயம்புத்தூர், நவம்பர் 23-ஆம் தேதி சேலம், டிசம்பர் 21-ஆம் தேதி தஞ்சாவூர், 2025 ஜனவரி 4-ஆம் தேதி திருவண்ணாமலை, ஜனவரி 24-ஆம் தேதி திருவள்ளூரில் மாநாடுகள் நடைபெற உள்ளன. இறுதியாக சென்னையில் நிறைவு மாநாடு நடத்தப்படும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநாட்டுக்கு அமித் ஷா வந்தது போலவே, எதிர்கால மாநாடுகளுக்கும் தேசிய தலைவர்களை அழைத்து வர பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் இம்மாநாடுகளில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
“நெல்லை மாநாடு, அமித் ஷாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக அமையவில்லை. மேலும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சற்றே மந்த நிலை இருந்தது. அதோடு, கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களும் மாநாடு நடத்தும் பணிகளை சிக்கலாக்கின.
இப்போது அந்த பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய மாநாடுகள் நடத்தப்படும். அதற்குள் கூட்டணி உறுதியாக்கப்பட்டு, அதிலுள்ள கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் அமர வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
எனவே, வருங்காலங்களில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருவார்கள். இது தொண்டர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்” என்றார்.