“பாஜக கூட்டணிக்குள் நடப்பது மன வருத்தம் தருகிறது” – நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகச் செய்தது தான் காரணம் என கூறப்படுவது எந்த ஆதாரத்திலும் நிலைக்காது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் தற்போது கிரகணம் பட்ட ஆட்சியே உள்ளது. அந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டிடிவி தினகரன் முக்கிய பங்காற்றினார். என்னைப் போன்ற பலருக்கும் முன்னேற்றம் ஏற்படுத்தியவர். அவருடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை,” என்றார்.
அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததாகவும், தற்போது அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி மாநிலத் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் நயினார் குறிப்பிட்டார். “எப்போதும் கூட்டணி அரசியலில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்பதில்லை. அதிமுகவின் வாக்கு வங்கி வலுவானது. கூட்டணியில் தொடர்வது அவசியம். தினகரனுடன் பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் பேசியுள்ளேன். அவர் வெளியேறப் போவதாக எதுவும் கூறவில்லை. எனவே, அவரது விலகலுக்கு நான்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது,” என்றார்.
மேலும், அதிமுகவில் பிளவுபட்டிருக்கும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும், செங்கோட்டையனை பாஜகவில் சேர்ப்பது தங்களின் விருப்பம் அல்ல, அது அதிமுகவின் உள்ளக விஷயம் எனவும் தெரிவித்தார்.
“முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதிய அடையாளத்துடன் சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் அனைவரும் தன் நண்பர்களே எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நயினார் கூறினார்.
அத்துடன், “முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் எந்த நாட்டுக்கும் உண்மையான நன்மை ஏற்பட்டதா என்பது சந்தேகமே. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்குகள் திருடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன்” என்றும் தெரிவித்தார்.