“செங்கோட்டையனை சந்திக்க பாஜக நிர்வாகிகள் யாரும் முன்வரமாட்டார்கள்” – கே.பி.ராமலிங்கம்
“எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்ளிட்ட யாரையும், பாஜகவினர் அணுகமாட்டார்கள்” என்று மாநில பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, பாஜகவினர் அதிக அளவில் பங்கேற்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நாமக்கல் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு உரையாற்றியபோது, “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்பது உறுதி” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம் கூறியதாவது:
“இபிஎஸ்க்கு எதிராகச் செயல்படும் யாரையும் தேர்தல் வரை பாஜக சந்திக்காது. கொள்ளைபோன பணத்தை மாத தவணை போல வழங்கி கூட்டணியை திமுக தக்கவைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் 19, 20, 21 தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதில் பாஜகவினர் திரளாக பங்கேற்க உள்ளனர். மேலும், நவம்பர் மாதம் முதல் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார்.
செங்கோட்டையன் பேசும் ஒருங்கிணைந்த அதிமுகக் கருத்தே தவறு; அது பாஜகவுக்கு சம்பந்தமே இல்லை. அதிமுக ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். பாஜக தலைவர்களை குறைகூறினால், நாங்களும் தினகரனை குறை சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
தனிப்பட்ட பொறாமையில் கட்சி தொடங்கி, ஓட்டுகளை பிளக்க முயற்சிப்பது தவறு. செங்கோட்டையனைப் போல பலர் தேர்தலுக்கு முன் வரலாம்; ஆனால் அதனால் எந்தவித தாக்கமும் இருக்காது. பாஜக நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க விரும்பவில்லை. இபிஎஸ்க்கு எதிராக இருப்பவர்களை தேர்தல் முடியும் வரை பாஜக தொடர்புகொள்ளாது” என்றார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் வரவில்லை
நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதேபோன்று, கடந்த முறை அதிமுக அலுவலக கூட்டத்திலும் அவர்கள் வரவில்லை.
இதற்கான காரணம் முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நாங்கள் அழைப்பை விடுக்கிறோம்; ஆனால் அவர்கள் பெற்றார்களா, இல்லையா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.