‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைது – திமுக அரசை சாடிய அண்ணாமலை

புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மு.க.ஸ்டாலின், கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை நடத்துகிறார்” என குற்றம்சாட்டியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:

“டிஜிபி அலுவலக வாசலில் புரட்சித் தமிழகம் தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விசிக கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை விடுவித்து, தன்னை தற்காத்துக் கொள்ள முயன்ற மூர்த்தியையே காவல்துறை கைது செய்துள்ளது. இது திமுக அரசின் சட்ட ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துகிறது. கருணாநிதியின் 2006–2011 ஆட்சியைவிட மோசமாக ஆட்சி நடத்துகிறார் அவரது மகன் ஸ்டாலின்” என்றார்.

கடந்த 6ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருளை சந்திக்க, டிஜிபி அலுவலகம் சென்றிருந்த ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, அங்கு விசிக கட்சியினருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ‘ஏர்போர்ட்’ மூர்த்தியும் விசிக நிர்வாகி திலீபனும் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், புரட்சித் தமிழகம் தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தியே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box