“திமுக தூண்டுதலில்தான் அனைத்து நிகழ்வுகளும் நடக்கிறது” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சம்பவங்களின் பின்னணியில் திமுகவின் கையோடு தொடர்பு இருக்கிறது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து என்னிடம் பதில் கேட்பது பொருத்தமல்ல. அவர் ராமர் கோயிலும், ரிஷிகேஷும் செல்லுவதாக கூறியிருந்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. அது அவர்களுடைய பழக்கம். ஆனால் எங்கள் கட்சி அதைப் பின்பற்றாது. கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வழங்கி, அவர்களை வளர்ப்பதே எங்களின் வழக்கம். நாட்டை பிளந்தது காங்கிரஸ்தான்.

தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று, இங்கு ஏற்கெனவே உள்ள சில நிறுவனங்களையே சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறார். அவர் சென்ற பிந்தைய முதலீடுகள் குறித்து நாங்கள் வெள்ளை அறிக்கையை கேட்கும்போது, வெறும் பதிவு மட்டுமே வெளியிட்டார். பெரிய முதலீடு எதுவும் வரவில்லை.

கடந்த தேர்தல்களைப் பற்றி பேசுவதால் பயனில்லை. அடுத்தது என்ன செய்வது என்பதுதான் அவசியம். தமிழக பாஜக சார்பில் அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தேவைப்பட்டால், நான் நேரடியாக சென்று பேசுவேன். அதேபோல், அழைக்க வேண்டிய சூழல் வந்தால் நானே அழைப்பேன்.

தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்வோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது. அதைத்தான் பணியாளர்கள் கோருகிறார்கள். சென்னையில் உண்ணாவிரதம் நடத்தினர், மதுரையில் போராட்டம் நடத்தினர். ஆனால் போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் அடக்கும் தன்மைதான் திமுக அரசுக்கு உள்ளது.

பாஜக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையை கேட்டார். அதற்காக அவர்மீது பல வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் மட்டுமல்ல, பலவிதமான மிரட்டல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆளுங்கட்சியிலிருந்தே அவை அதிகமாக வருகின்றன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழர், தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி வலிமையாக இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பது குறித்த செய்தியை நான் படிக்கவில்லை. செங்கோட்டையன் – நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றியும் எனக்கு தகவல் இல்லை. அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர் எடுத்த முடிவின் அடிப்படையில் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். எங்கள் பார்வையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நோக்கம். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை உடனே போய் சந்திப்பது சாத்தியமில்லை.

வருகிற 11ஆம் தேதி டெல்லி செல்கிறேன். செங்கோட்டையன் எங்கே உள்ளார் என தெரியவில்லை. முதலில் அவரிடம் கேட்டறியுங்கள்; பிறகு அவரைச் சந்திப்பது குறித்து முடிவு செய்வோம். ஊடகங்கள் உட்பட அனைவரையும் தூண்டி விடுவது திமுகதான். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் திமுக அரசுதான்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Facebook Comments Box